முன்னுரை:
அல்நார் நரம்பு என்பது கைகளில் முழங்கைக்கு கீழ் பகுதியில் முன்பகுதியில் விரல்களை மடக்குவதற்கும், மணிகட்டை மடக்குவதற்கும் உதவும் ஒரு நரம்பு ஆகும். இந்த நரம்பு பகுதியில் அடிபட்டால் கைகளை மடக்குவது, முழங்கை கீழ்ப்பகுதியில் உள்ள தசைகளை இயக்குவது மற்றும் மணிக்கட்டு, விரல்களை மடக்குவது கைகளை இறுக்கமாக மூடுவது போன்றவை பாதிக்கப்படலாம்.
அறிகுறிகள்:
பொதுவாக அல்நார் நரம்பு பாதிக்கப்பட்டால் கைகளில் சில பகுதிகளில் முக்கியமாக மணிக்கட்டு மற்றும் விரல்கள் பாதிக்கப்படுகின்றன. அவற்றிலும் முக்கியமாக சுண்டுவிரல் மற்றும் மோதிர விரலில் பாதி பகுதி விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் அமைந்திருக்கும் தசைகள் போன்றவை பாதிக்கப்படுகின்றன.
சில முக்கியமான அறிகுறிகள் தென்படுவதற்கு அல்லது காணப்படுவதற்கு முக்கியமான காரணங்களாக, அல்நார் நரம்பு மணிக்கட்டுப் பகுதியில் அழுத்தப்படுவது அல்லது அடிபடுவது போன்றவை சொல்லப்படுகின்றன. இந்த நரம்பு பாதிப்பினால் தசைகளில் அசைவு, தோல் பகுதியில் உணர்வு அல்லது இரண்டுமே சேர்ந்து பாதிக்கப்படும். பொதுவாக தசைகளில் இயக்கங்களில் அசைவு குறைவாக இருப்பது மற்றும் தசை வலுவிழந்து காணப்படுவது போன்றவை தென்படலாம். மேலும் உணர்ச்சி பாதிப்புகள் இருப்பதற்கும் மற்றும் மதமதவென்று உணர்வு(Numbness) இருப்பதற்கும், அல்லது நமநம என்று ஊர்வது(Tingling) போன்ற அறிகுறிகளும் காணப்படலாம்.
பொதுவாக நரம்பு பாதிக்கப்பட்ட பகுதியில், அறிகுறிகள் தோள்பட்டையில் இருந்து அல்லது முழங்கையில் இருந்து வெகு அருகில் இயக்கம் மற்றும் உணர்ச்சிகளின் பாதிப்பு இணைந்து காணப்படுகின்றன. ஒரு சில பாதிப்புகளில் அதாவது மணிக்கட்டு அல்லது உள்ளங்கை பகுதிகளில் பாதிப்புகள் இருந்தால் அறிகுறிகள் சற்று சிறிதளவில் காணப்படுகின்றன.
கியூபிடல் (cubital fossa) எனப்படும் முழங்கையின் முன்பகுதியில் இருக்கும் ஒரு பகுதியில் இந்த நரம்பு பாதிக்கப்பட்டால், அதனுடைய அறிகுறிகள் மதமதவென இருப்பதுபோன்று அல்லது கைகளில் சுண்டுவிரல் மற்றும் மோதிர விரலின் பகுதிகள் பாதிக்கப்படலாம். மேலும் கை விரல்கள் இயல்பாக இருக்கும் பொழுது விரல்கள் கிளா (claw hand) எனப்படும் கை இருக்கமான நிலை இருக்கின்றது. மேலும் இந்த நரம்பு பகுதி பாதிப்புக்குள்ளாகும் பொழுது, நியூரோபதி (neuropathy) எனப்படும் பாதிப்பாக இருந்தால் இதனுடைய அறிகுறிகள் மிகவும் மெதுவாகவே தென்படுகின்றன.
கண்டறிதல் மற்றும் பரிசோதனை:
பொதுவாக நரம்பு நல்ல நிலையில் இருக்கும்பொழுது அதனுடைய பாதிப்பு பற்றி அறிவது மிகவும் கடினம். மேலும் இந்த அல்நார் நரம்பு பாதிப்புக்குள்ளாகும் போது, அதனுடைய அறிகுறிகள் முகியமாக கை மற்றும் விரல்கள் கிளா (claw hand) எனப்படும் நிலையில் அசைவிழந்து காணப்படுவது.
பொதுவாக அறிகுறிகளை தவிர்த்து, மேலும் சில பரிசோதனைகள் செய்வதன் மூலம் இவற்றின் பிரச்சினைகளை கண்டறிய முடியும். முக்கியமாக அல்நார் நரம்பு பாதிக்கப்பட்ட உடன் இரண்டு விரல்களுக்கு இடையில் காகிதம் அல்லது அட்டை (paper or card test) போன்றவற்றை பிடிக்கச் சொல்லும் பொழுது பாதிக்கப்பட்டவர்களால் பிடிக்க இயலாது. மேலும் பேனா, பென்சில் (pen test) போன்றவற்றை இரண்டு விரல்களுக்கு இடையில் பிடிப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.
பரிசோதனைகளில் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் அல்லது நரம்பு கடத்தும் திறன் பரிசோதனை(Nerve conduction test) போன்றவை மூலம் நரம்பின் பாதிப்புகளை கண்டறியலாம். நிழற்படங்கள் அல்லது எக்ஸ்ரே போன்றவை மூலம் பாதிக்கப்பட்ட நரம்புப் பகுதியின் முதன்மை அறிகுறிகள்(primary symptoms) மற்றும் இரண்டாம் நிலை அறிகுறிகள்(secondary symptoms) நரம்புகள் பாதிக்கப்பட்ட இடம் அல்லது நரம்பு அழுத்தப்பட்ட இடம் போன்றவற்றை கண்டறிய இயலும். மேலும் அறிகுறிகள் நரம்பு பாதிப்புக்குள்ளாகும் பொழுது வீக்கம்(inflammation) போன்றவை நரம்பில் இருந்தால், நரம்புகளில் அறிகுறிகள் மூலம் கண்டறிய முடியும்.
நோய் வேறுபாடு அறிதல்(differential diagnosis):
பொதுவாக நரம்புகள் பாதிப்புகள் அவற்றின் அறிகுறிகள் அல்லது தசை பாதிக்கப்படுவது(muscle involvment), இயக்கங்கள் பாதிக்கப்படுவது(movement involment), போன்றவற்றை வைத்து பாதிக்கப்படும் நரம்புகளை கண்டறிய இயலும். ஆனால் முழங்கையின் கீழ் பகுதியில் முன்பகுதியில் அல்நார் (ulnar nerve) மற்றும் மீடியன் நரம்பு(median nerve) இவைகளை பிரித்தறிவது சற்று கடினமான விஷயமாக இருக்கிறது. இதனால் நோய் பாதிப்புகளை மிகவும் கவனமாக கண்டறிய வேண்டும்.
முதலில் அறிகுறிகளை வைத்து அல்நார் நரம்பு பாதிக்கப்பட்டதை எளிதாக கண்டறிய சில முக்கியமான விஷயங்களை கையாள வேண்டும். பொதுவாக அல்நார் நரம்பு பாதிப்புக்குள்ளாகும் போது, கைகளில் விரல்களில் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் மட்டுமே பாதிப்புக்குள்ளாகும். இதனால் இவ்விரண்டு விரல்களுக்கும், விரல்களை மடக்குவது(finger flexion) மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் மற்ற மூன்று விரல்கள் எளிதாக மடக்கி நீட்ட முடியும். பாதிப்புக்கு அப்பாற்பட்டு இந்த மூன்று விரல்கள் எந்த நிலையிலும் பாதிக்கப்படாமல் இருக்கும்.
வகைப்பாடு(types):
அல்நார் நரம்பு பாதிக்கப்படுவது மற்றும் அதனுடைய அறிகுறிகளை வைத்து அல்நார் நரம்பு பாதிப்புகளை வகைப்படுத்த முடியும். நரம்பு அடிபடுவது போன்றவற்றை வைத்து மற்றும் நரம்பு பாதிக்கப்பட்ட இடத்தை பொருத்து இவற்றை பிரிக்க இயலும். முதலில் காரணங்களை வைத்து அல்லது நரம்புகளின் அமைப்பைப் பொறுத்து நரம்பு பாதிக்கப் படுவதை வகைப்படுத்த முடியும்.
அவைகள்-
1.நரம்பு பிரச்சனைகள் கழுத்துப் பகுதியிலிருந்து ஆரம்பிக்கலாம். அல்லது கழுத்துப் பகுதியின் தசைகள், கழுத்து எலும்புகள் பாதிப்புகள்.
2.பிரேக்கியல் பிளக்சஸ் (brachial plexus) எனப்படும் நரம்பு தொகுப்பு பாதிக்கப்படுவது.
3.மணிக்கட்டு பகுதியில் ஏற்படும் அழுத்தம் எலும்பு உடைதல்.
மேலும் சில
ரத்தக் குழாய்களில் ஏற்படும் அனியூரிஸ்ம் (annurysm) அல்லது ரத்தக்கட்டி, நோய்த்தொற்று, புற்றுநோய் கட்டி, சர்க்கரை நோய் தைராய்டு நோய், முடக்கு வாதம் மற்றும் மது அருந்துதல் போன்றவைகள் மூலமும் அல்லார் நரம்பு பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.
மருத்துவம் மற்றும் இயன்முறை மருத்துவம்:
பொதுவாக அல்லார் நரம்பு பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு முதன்மையாக, முதன்மை சிகிச்சை(primary management) அளிக்கப்படுகிறது. அதாவது நரம்பு பாதிப்புகள், அதற்குரிய காரணங்களை அறிந்து அவற்றிற்கு மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை போன்றவை உடனடியாக கொடுக்கப்படுகிறது. அவை முடிந்தபின் இயன்முறை மருத்துவம் மற்றும் பயிற்சிகள் கொடுக்கும் பொழுது மீண்டும் இயல்பான நிலைக்கு கொண்டு வர முடியும்.
இயன்முறை மருத்துவம் மற்றும் பயிற்சிகள்:
பொதுவாக நரம்புகளை பாதிப்புகளைப் பொறுத்து இயன்முறை மருத்துவம் அளிக்கப்படுகிறது இவற்றில் நரம்பு அழுத்தப்பட்டு இருப்பின் இயல்பாக மின் தூண்டல் சிகிச்சை (electrical stimulation) தொடர்ந்து தசைகளின் இயக்கங்கள் வரும்வரை கொடுக்கப்படுகிறது. அல்லது நரம்பு துண்டிக்கப்பட்டு இருந்தால் அறுவை சிகிச்சையின் மூலமும் (neural reconstruction surgery) அல்லது மருந்துகள் மூலமும் சரி செய்யப்பட்ட பின் இயன் முறை மருத்துவம் கொடுக்கப்படுகிறது. ஆரம்பத்தில் இயன்முறை மருத்துவத்தின் மின்தூண்டல் சிகிச்சை மற்றும் இயன்முறை மருத்துவர்கள் (Physiotherapist) கொடுக்கும் ஒவ்வொரு மூட்டு அசைவுகள் மிகவும் முக்கியமானவை. இவற்றில் மின் தூண்டல் சிகிச்சை கொடுப்பது மிகவும் பலனளிக்கும். அடுத்ததாக இயன்முறை மருத்துவர்கள் செய்யும் பயிற்சிகள் (excercises) மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சிகள், கற்றுக்கொடுக்கும் பயிற்சிகள், தொடர்ந்து செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்யும்பொழுது நரம்புகள் வேகமாக இணையும், அதே நேரத்தில் தசைகளின் இயக்கங்கள் ஆரம்பித்து விடும். மேலும் தசைகளின் இயக்கங்களை பொறுத்து இயன்முறை மருத்துவத்தின் பயிற்சிகள் அமையும். பயிற்சிகள் ஒவ்வொரு நோயாளிகளுக்கும் ஒவ்வொரு விதமாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. காரணம் என்னவென்றால் தசைகளின் பாதிப்பு மற்றும் தசைகளின் வலிமை பொருத்து பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும் தசைகள் எதிர்பார்த்த அளவுக்கு வலிமையை அடைந்துவிட்டால் அவர்களுக்கு அந்த தசைகள் வேலையை செய்யும் அளவிற்கு பயிற்சி கொடுக்கப்பட வேண்டும். இதேபோல் பாதிக்கப்பட்டவர்கள் பயிற்சியை செய்யும் பட்சத்தில் தசைகளின் இயக்கங்கள், வலிமை, பாதிக்கப்பட்ட மூட்டுப் பகுதி, மணிக்கட்டு விரல்கள், சுண்டுவிரல், மோதிர விரல் போன்றவை விரைவில் இயல்பான நிலைக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. அல்நார் நரம்பு பாதிப்பு என்பது அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை மற்றும் பயிற்சிகள் பயிற்சிகள் தினசரி வேலைகளை செய்வதற்கு கொடுக்கப்படும் பயிற்சிகள் போன்றவை பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி…
ஸ்ரீ குமரன் பிசியோதெரபி கிளினிக் மற்றும் உடற்பயிற்சி மையம்.
Comments